Latestமலேசியா

கெடாவில், ரேபிஸ் நோயால் 31 வயது ஆடவர் பலி

கெடா, செப்டம்பர் 27 – கெடா குபாங் பாசுவைச் சேர்ந்த 31 வயது ஆடவர் ஒருவர் ரேபிஸ் (rabies) எனப்படும் வெறிநாய்க்கடி நோயால் இன்று உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தெருநாய் ஒன்று அவரைக் கடித்த நிலையில், சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோதும் ரேபிஸ் தடுப்பு சிகிச்சை வழங்கப்படவில்லை.

செப்டம்பர் 18ஆம் தேதி உடல் சோர்வு, பலவீனம் மற்றும் வலது கையில் உணர்வின்மை ஏற்பட்டது. பின்னர் விழுங்குவதில் சிரமம், தண்ணீர் மற்றும் காற்றைக் கண்டு அச்சம், பதற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 26ஆம் தேதி ஆய்வகப் பரிசோதனையில் ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு கெடாவில் மனிதர்களிடையே ரேபிஸ் காரணமாக ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். ஆகஸ்ட் மாதம் வரை மாநிலத்தில் விலங்குகள் கடித்தது அல்லது கீறியதாக 502 சம்பவங்கள் பதிவாகியதில் 65.3 விழுக்காடு நாய்கள் தொடர்பானவை.

இந்நிலையில் பொதுமக்கள் தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளைத் தொடுவதையோ உணவளிப்பதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலங்கு கடித்தாலோ கீறினாலோ காயத்தை சோப்பு மற்றும் ஓடும் நீரால் குறைந்தது 15 நிமிடங்கள் கழுவி, உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை பெற வேண்டும். அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்கக் கூடாது என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!