
ஷென்சென், நவம்பர்-20,அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அலுவல்களின் போது ஒழுங்கையும் நாகரீகத்தையும் மீறிப் பேசும் அமைச்சர்கள் அல்லது துணையமைச்சர்கள், பதவி விலக வேண்டுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்துகொண்டே, மக்களவையில் பாக்காத்தான் ஹராப்பான் குறித்து சர்ச்சைக்குரிய _pantun_ கவிதையை வாசித்த பொதுப்பணித்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லானின் செயலுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
அஹ்மாட் மஸ்லான் எழுத்துப்பூர்வமாகக் கோரிய மன்னிப்பை ஏற்றுக்கொண்ட அன்வார், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என வலியுறுத்தினார்.
அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் அரசியல் மேடைகளில் பேசுவது வேறு.
ஆனால், அரசாங்கத்தின் முடிவுகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவற்றை அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்கள் விவாதிக்க வேண்டுமே தவிர, அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் வெளிப்படுத்தக்கூடாது என்றார் அவர்.
இனிவரும் காலங்களில் இந்த ஒழுங்குமுறையை மீறுவோர், தாங்களாகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் திட்டவட்டமாகக் கூறினார்.
APEC மாநாட்டுக்குப் பிறகு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.



