
ஜகார்த்தா, நவம்பர். 26 – இந்தோனேசியாவின் ஜாவா தீவிலுள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேரைக் காணவில்லை.
திங்கட்கிழமை பெய்த கனமழையால் அருகிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுரங்கத்துக்குள் நீர் புகுந்ததால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்குழுத் தலைவர் கூறுகையில், 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போன 13 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள குறுகிய சுரங்கப் பாதைகள், போதிய வெளிச்சமின்மை மற்றும் வழுக்கும் நிலப்பரப்பு ஆகியவற்றால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வெள்ளம் சுரங்கத்துக்குள் புகுவதற்கு முன்பாக 11 தொழிலாளர்கள் உயிர் தப்பியதாக மேற்கு ஜாவா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.



