
புத்ராஜெயா, நவ. 26 – கோலாலம்பூர், சிலாங்கூர் சீன மண்டபச் சங்கத்தின் (KLSCAH) நிலக் குத்தகை விவகாரம் தொடர்பாகத் தனது உதவியாளர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (SPRM) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதை, கூட்டரசுப் பிரதேச விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று தனது அலுவலகத்திற்கு வந்த மூன்று SPRM அதிகாரிகள், விசாரணைக்கு உதவும் வகையில் இன்று காலை தனது உதவியாளரை ஆணையத்தில் முன்னிலையாகுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி, KLSCAH நிலத்திற்கான 99 ஆண்டுக் குத்தகையைப் புதுப்பிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. இதற்கான குத்தகைத் தொகை 4.67 மில்லியன் ரிங்கிட் என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், பெயரளவிலான கட்டணமாக 1,000 ரிங்கிட் நிர்ணயிக்கப்பட்டது.
நிலத்தின் பயன்பாடு வணிகப் பிரிவிலிருந்து நிறுவனப் பயன்பாட்டுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதன் அடிப்படையிலேயே இந்தக் கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டதாக ஹன்னா விளக்கமளித்திருந்தார்.
இந்த முடிவைத் தொடர்ந்து, நிலத்தின் மதிப்பீடு மற்றும் கட்டணக் குறைப்புக்கான காரணங்கள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.



