
புத்ராஜெயா, ஜூன்-27-SPM தேர்வில், நன்னெறிப் பாடத்திற்கான மதிப்பீட்டு முறை முற்றிலும் தொழில்முறைத் தன்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நடத்தப்படுவதாகக் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
2025 SPM தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மலேசியத் தமிழ்ப்பள்ளி அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள் கூட்டமைப்பு சமர்ப்பித்த மகஜருக்குப் பதிலளிக்கும் வகையில் கல்வி அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் A+ பெறும் சிறந்த மாணவர்கள், நன்னெறிப் பாடத்தில் ‘A’ பெறத் தவறுவது குறித்த புகாருக்குப் பதிலளித்த அமைச்சு, ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறான வடிவமைப்பு மற்றும் புள்ளி வழங்கும் தரநிலைகள் இருப்பதால் அவற்றை நேரடியாக ஒப்பிட முடியாது எனக் கூறியது.
நன்னெறிப் பாடம் என்பது மனப்பாடம் செய்வதை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக மாணவர்களின் தார்மீக சிந்தனை மற்றும் பகுத்தறியும் ஆற்றலை மதிப்பிடுவதாகும்.
மேலும், கட்டுரைக்கான புள்ளி வழங்கும் முறை முற்றிலும் தன்னிச்சையானது அல்ல என்றும் KSSM பாடத்திட்டத்தின் கீழ் தார்மீக பகுத்தறிவு, தார்மீக உணர்ச்சி மற்றும் தார்மீக நடத்தை ஆகிய 3 முக்கிய அம்சங்களின் அடிப்படையிலேயே புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சு விளக்கியது.
அதே சமயம், விடைத்தாள் திருத்தும் முறை இரகசியமாக வைக்கப்படுவது மற்றும் மறுபரிசீலனைக்கான 100 வெள்ளி கட்டணம் ஆகியவை 1996 கல்விச் சட்டத்தின் கீழ் பொதுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் பேணுவதற்கான நிலையான நடைமுறையாகும்.
இது அனைத்துலக கேம்பிரிட்ஜ் மதிப்பீட்டு வாரியங்களின் தரத்திற்கு இணையானது என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.



