
ஜோகூர் பாரு, அக்-09-ஜோகூர், Yong Pengங்கில் 16 வயது மாணவி Irene Sofiya Mohd Khairool Faisal கொலை செய்யப்பட்டதற்கு காதல் நிராகரிப்பால் ஏற்பட்ட பழிவாங்கும் உணர்வு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அம்மாணவியின் வகுப்புத் தோழரான 16 வயது மாணவர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்ததாக ஜோகூர் காவல் துறைத் தலைவர் Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார்.
சந்தேக நபர் தனது காதலை வெளிப்படுத்தியபோது மாணவி நிராகரித்ததாகவும், அவர் சந்தேக நபரின் நெருங்கிய நண்பரைக் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைக்காக விசாரணை ஆவணங்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக Datuk Ab Rahaman Arsad கூறினார்.
பிரேதப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே மாணவியின் உயிரிழப்புக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்காத்துக் கொள்ள முயன்றதற்கான அடையாளங்களும் அவரது உடலில் காணப்பட்டன. 96 சென்டிமீட்டர் நீளமுள்ள உலோகப் பொருளால் அவர் பலமுறை தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அக்கொலையுடன் தொடர்புடையவை என சந்தேகிக்கப்படும் கைப்பேசி, உலோகப் பொருள், ஆடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபருக்கு பள்ளியில் முந்தைய ஒழுங்கு நடவடிக்கைப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவரது மனநலம் தொடர்பான விவகாரங்கள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தின் முடிவுக்கு விடப்படும் என Datuk Ab Rahaman Arsad குறிப்பிட்டார்.
சந்தேக நபரின் தடுப்புக் காவல் மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. Yong Pengங்கில் உள்ள இடைநிலைப் பள்ளி மண்டபத்தில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி Irene Sofiya சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



