Latestமலேசியா

பத்துமலையில் நவீன தமிழ் நூலகம் திறப்பு; ‘கடாரம் கொண்டான்’ நாவல் வெளியீடு, AI மூலம் திருக்குறள் அறியும் வசதி அறிமுகம்

மலேசிய ஆலயங்களில் தனித்துவமான முயற்சியாக, பத்துமலை திருத்தல வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி தமிழ் நூலகம் மற்றும் புத்தக விற்பனை மையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜாவின் சிந்தனையில் உருவான இந்நூலகத்தின் திறப்பு விழா முப்பெரும் விழாவாக நேற்று நடைபெற்றது.

கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா இந்நூலகத்தின் சிறப்பம்சம் மற்றும் இவ்விழாவின் முக்கியதுவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், ‘கடாரம் கொண்டான்’ என்ற வரலாற்று நாவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

மலேசிய இந்தியச் சமுதாயம் நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், சோழர்களின் கடாரம் வெற்றியின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் ‘கடாரம் கொண்டான்’ நாவல் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நாவல் வெளியீட்டின் மூலம் சுமார் 50,000 ரிங்கிட் நிதி திரட்டப்பட்டது.

முழுமையாகக் குளிரூட்டப்பட்ட இந்நூலகத்தில் சமய நூல்கள், தேவாரம், தமிழ் நாவல்கள், கலைக்களஞ்சியங்கள் உள்ளிட்ட சுமார் 2,000 தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் 90 விழுக்காடு தமிழ் நூல்களாகவும், 10 விழுக்காடு மாணவர்களின் பயன்பாட்டிற்கான ஆங்கில நூல்களாகவும் உள்ளன.

மேலும், திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் விளக்கத்துடன் அறிந்து கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கணினி வசதியும் அமைக்கப்பட்டுள்ளதாக மஹிமா தலைவரும் மஇகா பொருளாளருமான டத்தோ என். சிவகுமார் விவரித்தார்.

காலை 10 மணி முதல் ஆலயம் மூடப்படும் வரை செயல்படும் நூலகத்தின் மேல் தளத்தில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாசகர்கள் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துச் சென்று படித்துவிட்டுத் திருப்பி வழங்கும் சேவையுடன், புத்தக விற்பனைப் பிரிவும் செயல்படுகிறது. பத்துமலைக்கு வருகை தரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேவஸ்தான நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வேளையில், முப்பெரும் விழாவை முன்னிட்டு தமிழகத்திலிருந்து வந்த புலவர் ராமலிங்கம் தலைமையிலான குழுவினரின் பட்டிமன்றம், பின்னணிப் பாடகர் செந்தில் தாஸின் இன்னிசைக் கச்சேரி மற்றும் உள்ளூர் கலைஞர் பிரவீண் குழுவினரின் நடன நிகழ்ச்சி ஆகியவையும் இடம் பெற்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!