
டெஹ்டாருன், ஆகஸ்ட்-20-இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்கா அருகே, சுற்றுப் பயணிகள் பார்த்துக் கொண்டிருந்த போதே முழு வளர்ச்சி அடைந்த வங்காளப் புலி ஒன்று, குதிரையை வேட்டையாடி காட்டுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரபல கர்ஜியா கோவில் மற்றும் பூங்காவை ஒட்டிய சாலையில் சென்ற சுற்றுப் பயணிகள், சஃபாரி வாகனங்களில் இருந்தபடியே இந்த காட்சியைப் பதிவுச் செய்துள்ளனர்.
அதில், சாலையோரம் நின்றிருந்த குதிரையின் கழுத்தை கவ்விப் பிடித்தப் பெரிய புலி, சுற்றியிருந்தவர்களின் கூச்சலையும் பொருட்படுத்தாமல் அதை எளிதாகப் புதருக்குள் இழுத்துச் சென்றது பதிவாகியுள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக 260-க்கும் மேற்பட்ட வங்காளப் புலிகள் வாழும் பகுதியாக இந்தப் பூங்கா விளங்குகிறது.
சுற்றுப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிகம் நடமாடும் முக்கிய சந்திப்பிலேயே இந்த வேட்டை அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



