
ஜோகூர், ஆகஸ்ட் 28 – ஜோகூர், கூலாயில் 17 வயது சிறுமி கார் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 15 வயது சிறுமி உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, சிறுமியும் நண்பர்களும் Perodua Myvi காரில் வீடு திரும்பியபோது, கருப்பு Toyota Vellfire கார் அவர்களது வாகனத்தை மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் முன்பக்க இருக்கையில் இருந்த சிறுமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதலில் விபத்தாக விசாரிக்கப்பட்ட இந்தச் சம்பவம், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலுடன் தொடர்புடையதாக இருக்கலாமென போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12 கைபேசிகள், 3 வாகனங்கள் மற்றும் இரு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 9 பேருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும், அனைவரின் போதைப்பொருள் பரிசோதனையும் எதிர்மறையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.



