
கோத்தா திங்கி, செப்.03-ஜோகூர், Teluk Sengatடில் உள்ள ஜோகூர் ஆற்றுப் பாலம் அனைத்து சாலைப் பயனர்களும் பயன்படுத்தக்கூடிய நிலையில் பாதுகாப்பாகவே இருப்பதாக Sendai-Desaru Expressway Berhad (SDEB) தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து மிதந்து வந்த கப்பல் ஒன்று பாலத்தின் கட்டமைப்பில் மோதியது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக பாலத்தின் கட்டமைப்பை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழில்நுட்பக் குழுவினர் மேற்கொண்ட பரிசோதனையில் பாலத்தின் கட்டமைப்பு பாதுகாப்பாகவும், வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய நிலையிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மோதிய கப்பலும் நேற்று மாலை 3.16 மணியளவில் அங்கிருந்து அகற்றப்பட்டதாக SDEB விளக்கியது.
நெடுஞ்சாலைப் பயனர்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், பாலத்தின் கட்டமைப்பை அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் அது கூறியது. அதேவேளை, சாலைப் பயனர்கள் போக்குவரத்து விதிகளை எப்போதும் பின்பற்ற வேண்டும்.
அவ்வப்போது வெளியிடப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.
அச்சம்பவம் தொடர்பான சில புகைப்படங்கள் முன்னதாக Facebookக்கில் பகிரப்பட்டு, அப்பாலம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
அது அப்பாலத்தைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



