
புத்ராஜெயா, அக்.08-நாட்டில் குடிநுழைவு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 3,000 முதல் 4,000 மியன்மார் நாட்டவர்களைத் திரும்ப ஏற்றுக் கொள்ள மியன்மார் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
இன்று Putra Perdanaவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது மியன்மார் அதிபர் Min Aung Hlaing அதனைத் தெரிவித்ததாக அவர் கூறினார். இருப்பினும், தாயகம் திரும்பும் நடவடிக்கைகள் அடையாளச் சரிபார்ப்பு, குற்றப் பின்னணி ஆய்வு மற்றும் இரு நாடுகளின் நடைமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதுவரை 10,493-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்கள் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மூலம் மலேசியாவிலிருந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கடற்படைகள் இடையே நெருங்கிய ஒத்துழைப்பின் வாயிலாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே தங்கள் குடிமக்களை மீண்டும் ஏற்றுக் கொள்வதுடன், தாயகம் திரும்பும் நடவடிக்கைகளுக்கான பெரும் செலவுகளையும் ஏற்க மியன்மார் முன்வந்துள்ளதற்கு அன்வார் பாராட்டு தெரிவித்தார். அவ்வாறு செய்யும் நாடுகள் மிகக் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, எஞ்சியுள்ள மியன்மார் நாட்டவர்களைத் தாயகம் திரும்ப அனுப்புவது தொடர்பில் மேலதிக பேச்சுவார்த்தைகள் தொடரும் என பிரதமர் சொன்னார். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.



