
கோலாலம்பூர், அக்டோபர்-4 – ஜோகூர், யொங் பெங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அதில் குற்ற அம்சங்கள் கண்டறியப்பட்டால், சட்டத்திற்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“நமது குழந்தைகளின் பாதுகாப்பு அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். அவர்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் உறுதிச் செய்யப்படுவதில் அரசாங்கம் எந்தச் சமரசமும் செய்யாது” என அறிக்கையொன்றில் அன்வார் தெரிவித்தார்.
மாணவியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தப் பிரதமர், இந்தக் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு மனவலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
நான்காம் படிவ மாணவியான அவர், நேற்று மாலை பள்ளியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மாலை சுமார் 5.30 மணிக்கு துணைப்பாட வகுப்பு முடிந்த பின்னரும் வீடு திரும்பாததால், அவரைத் தேடி பள்ளிக்குச் சென்ற பாட்டியே மாணவியைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மண்டபப் பகுதியில் மாணவி பலவீனமான நிலையில் கிடந்ததாகவும், அவரது உடலில் உலர்ந்த இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, மாணவியின் தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருந்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் Ab Rahaman Arsad தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவுரவு சுமார் 7 மணியளவில் 16 வயது பையன் கைதுச் செய்யப்பட்டான்.
சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும் Ab Rahaman கூறினார்.
கைதைத் தொடர்ந்து, கைத்தொலைபேசி, ஆடைகள் மற்றும் ஒரு ஜோடி செருப்புகள் ஆகியவற்றையும் போலீஸார் விசாரணைக்காகப் பறிமுதல் செய்துள்ளனர்.



