
குவாந்தான், ஆகஸ்ட்-9 – பஹாங், ரவூப், சுங்கை ரூவானில் உள்ள ஓர் உல்லாசத்தலத்தில், மீன் குளத்தில் விழுந்த தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 46 வயதான Mohamed Hafidz Che Din என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ரொட்டிப் பையை எடுக்க முயன்றபோது, அவரது 8 வயது மகன் எதிர்பாராதவிதமாகக் குளத்தில் விழுந்துள்ளான்.
மகனைக் காப்பாற்றுவதற்காகத் தந்தையும் குளத்தில் குதித்துள்ளார்.
அங்கிருந்த ஊழியர் ஒருவரும், இந்தோனேசியச் சேர்ந்த மற்றொரு நபரும் இணைந்து சிறுவனைப் பத்திரமாக மீட்டுவிட்டனர்.
ஆனால், தந்தை நீரில் மூழ்கி சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகே குளத்தின் படிகள் அருகே கண்டெடுக்கப்பட்டார்.
CPR முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
பின்னர், ரவூப் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில், அவர் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.



