
கோலாலம்பூர், செப்டம்பர்-3,கூடுதலாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கமர்த்தும் எண்ணம் தற்போது அரசாங்கத்திற்கு இல்லை என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 6 மாதங்களில் மலேசியா 2 இலட்சத்திற்கும் அதிகமான வங்காளதேச தொழிலாளர்களைத் தருவிக்கவிருப்பதாக வெளியான செய்திகளை அவர் முற்றிலும் மறுத்தார்.
“6 மாதங்களில் 200,000 பேர் என்றால், ஒரு நாளைக்கு 1,000 வங்காளதேசத் தொழிலாளர்களைத் தருவிக்க வேண்டும். இது எப்படி சாத்தியமாகும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
உண்மையில், வங்காளதேச துணை அமைச்சர் ஒருவர் வெளியிட்ட அக்கூற்று தவறான புரிதலால் உருவானது என ரமணன் தெளிவுபடுத்தினார்.
இவ்வேளையில், அந்த அறிக்கை டாக்காவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்பதை ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், நாட்டின் தொழில் மற்றும் சேவைத் துறைகளின் நேரடித் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே வெளிநாட்டு ஊழியர் நியமனம் அமையும்.
நாட்டின் மொத்த தொழிலாளர்களில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை 13 விழுக்காடாகக் கட்டுப்படுத்தவும், 2030-ஆம் ஆண்டுக்குள் அதை 10 விழுக்காட்டுக்குக் குறைக்கவும் அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
எனவே, மிகவும் அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் மட்டுமே அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்கப்படும் என ரமணன் தெளிவுப்படுத்தினார்.



