
புத்ராஜெயா, ஜூன்-19-கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் முடங்கிக்கிடந்த T. நவீன் கொலை வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
35 வயது கோபிநாத்தின் கடைசி முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ள அரசுத் தரப்பு பலமுறை முயன்றும் அவர் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி நோர்டின் ஹாசன் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம், இவ்வழக்கின் மற்ற 4 குற்றவாளிகளான J. ராகசுதன், S. கோகுலன் மற்றும் சம்பவத்தின் போது சிறுவர்களாக இருந்த இருவர் மீதான விடுதலையை இரத்துச் செய்து, அவர்களைத் தற்காப்பு வாதம் செய்ய உத்தரவிட்டிருந்தது.
அவர்கள் அனைவரும் தற்போது மீண்டும் கைதுச் செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, உயர் நீதிமன்றத்தில் புதிய விசாரணைத் தேதிகளை நிர்ணயிப்பதற்கான வழக்கு வரும் ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இசைக் கலைஞராக உருவாகக் கனவுக் கொண்டிருந்த 18 வயது நவீன், கடந்த 2017-ஆம் ஆண்டு பினாங்கில் நடந்த கொடூரமான பகடிவதைத் தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.



