Latestமலேசியா

RM11.6 மில்லியன் ஊழல் வழக்கு: நீதிமன்ற மேல்முறையீடு தள்ளுபடி; லிம் குவான் எங் மற்றும் அவரது மனைவிக்கு விசாரணை உறுதி

புத்ராஜெயா, ஜூன்-24-பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங், அவரது மனைவி பெட்டி சியூ (Betty Chew) மற்றும் பெண் தொழிலதிபர் ஃபாங் லி கூன் (Phang Li Koon) ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒருமனதாக தள்ளுபடி செய்துள்ளது.

முதல்வராக இருந்த சமயத்தில், 11.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் தங்கும் விடுதி திட்டத்தில் முறைகேடு மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இரத்துச் செய்யக் கோரி இவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு, பினாங்கு உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் எவ்வித தவறும் இல்லை எனக் கூறி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் முன்வைக்கப்பட்ட இரட்டைத் தண்டனைத் தடுப்பு வாதம் (double jeopardy) இந்த வழக்கிற்குப் பொருந்தாது என நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.

இதையடுத்து, இந்த வழக்கு பினாங்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!