
கோலாலம்பூர், ஜூலை-19-சிலாங்கூரில் கடத்தப்பட்ட 46 வயது ஆடவரை, போலீஸார் அதிரடி நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய 6 சந்தேக நபர்களும் கைதுச் செய்யப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்டவரின் மனைவி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அளித்த புகாரைத் தொடர்ந்து, புக்கிட் அமான் மற்றும் சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறையினர் இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கடத்தப்பட்ட நபர், ஷா ஆலாம் I-City பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, 48 மணி நேரத்திற்குள்ளாகவே பத்திரமாக மீட்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 30 முதல் 46 வயதுக்குட்பட்ட 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண், 1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் கீழ் 10 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள், கைப்பேசிகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தலுக்கான நோக்கம் மற்றும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



