
கோலாலம்பூர், அக்டோபர்-10,
2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரப் பயனர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தேசிய மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களையும் TNB வரவேற்றுள்ளது.
பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த பட்ஜெட்டில், வீட்டுப் பயனர்களுக்கான மாதாந்திர மின்சாரப் பயன்பாட்டு பாதுகாப்பு வரம்பு, 600 கிலோவாட் மணியிலிருந்து 800 கிலோவாட் மணியாக உயர்த்தப்பட்டிருப்பது, 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நாட்டிலுள்ள மொத்த வீட்டுப் பயனர்களில் 90 விழுக்காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.
இவ்வேளையில், அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில், தேசிய மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்த 15 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்படுவதையும் TNB வரவேற்றுள்ளது.
இந்தத் தொகை, 2025 முதல் 2027-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தேசிய மின்சாரக் கட்டமைப்பை நவீனமயமாக்க TNB மேற்கொள்ளும் 43 பில்லியன் ரிங்கிட் முதலீட்டின் ஒரு பகுதியாகும்.
மேலும், கிராமப்புறங்களில் சூரியசக்தியிலான தெருவிளக்குகளை அமைத்தல், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக நல இல்லங்களில் சூரியசக்தி மின்தகடுகளைப் பொருத்துதல் போன்ற முயற்சிகளுக்கும் TNB ஆதரவு தெரிவித்துள்ளது.
2050-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சார உற்பத்தித் திறனில் 70 விழுக்காட்டைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறும் இலக்கை அடைவதற்கும் TNB உறுதிபூண்டுள்ளது.



