
கோலாலம்பூர், மே-5-மே 2-ஆம் தேதி ஜாலான் அம்பாங்கில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்தில் தொடர்புடைய 24 வயது காரோட்டி, விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 61 வயது A. துரைசிங்கம், அவரின் 56 வயது மனைவி A. மேனகா இருவரும் உயிரிழந்தனர்.
சந்தேக நபர் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு, நேற்றிரவு டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவுச் செய்த கையோடு கைதானார்.
இந்நிலையில், கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கொலைக் குற்றங்களுக்கான குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, மே-11 வரை அவரைத் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட காரோட்டி மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், பரிசோதனை முடிவுகளுக்காக போலீஸ் காத்திருக்கின்றது.



