
பெட்டாலிங் ஜெயா- மலேசியாவில் நடந்த ஃபார்முலா ஒன் பந்தயத்தை முன்னிட்டு, பிரிட்டனின் மெக்லாரன் அணி உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயிலின் படத்தைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் கூடவே மலேசியாவின் அடையாளத்தை எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியது.
பத்துமலை போன்ற இந்து வழிபாட்டுத் தலத்தை நாட்டின் அடையாளமாகக் காட்டியது குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பத்துமலை மலேசியாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று; அதன் இருப்பும் வரலாறும் இந்த நாட்டுப் பின்னணியின் ஒரு பகுதி எனச் சுட்டிக்காட்டினர்.
மெக்லாரன் மட்டுமல்ல; ஃபெராரி, ஆடி, ஹாஸ், ஆஸ்டன் மார்ட்டின் உள்ளிட்ட அணிகளும் மலேசியாவில் தாங்கள் பார்த்த இடங்களைப் பகிர்ந்தன. இரட்டைக் கோபுரங்கள், டத்தாரான் மெர்டேக்கா, சென்ட்ரல் மார்க்கெட், புக்கிட் பிந்தாங், பத்துமலை எனப் பல இடங்கள் அந்தப் பதிவுகளில் இடம்பெற்றன. ரசிகர்கள் அவற்றை ரசித்ததுடன், மலேசியாவின் பல்வேறு முகங்களைப் பார்த்தும் மகிழ்ந்தனர்.
பத்துமலை படத்தைப் பார்த்து எழுந்த இந்தச் சிறிய கேள்வி, நம் நாட்டை யார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற பெரிய விவாதமாக மாறியது கவலைக்குரியது. மலேசியாவை ஒரு சின்னத்துக்குள் அடக்க முடியாது. நம்முடைய பல்வேறு மதங்கள், பண்பாடுகள், மொழிகள், மரபுகள் எல்லாமே இந்த நாட்டின் அடையாளத்தின் ஓர் அங்கம்.
இந்தப் பன்முகத்தன்மையே மலேசியாவின் தனித்துவமான வலிமை; அதை அனைத்து மலேசியர்களும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என
பலரும் கருத்து தெரிவித்திருந்தது வரவேற்கப்படப் வேண்டியது.



