
ரவாங், ஆகஸ்ட்-25-சிலாங்கூர், ரவாங்கில் உள்ள குவாங் சாலைச் சந்திப்பு விரிவாக்கத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில், அங்குள்ள ஆலயத்தை மாற்று இடத்திற்கு இடமாற்றம் செய்ய அதன் நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அப்பகுதியில் நீடித்து வந்த பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளதாக, சிலாங்கூர் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச விவகாரங்களுக்கான லிமாஸ் (LIMAS) இணைத் தலைவர் வீ. பாப்பாராயுடு தெரிவித்தார்.
ஆலய நிர்வாகம், Sime Darby நிறுவனம், குவாங் சட்டமன்ற Mohd Rafiq Mohd Abdullah, ஆட்சிக்குழு அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்த சுமூக முடிவு எட்டப்பட்டது.
ஆலயத்திற்காக 0.72 ஹெக்டர் பரப்பளவில் மாற்று நிலம் வழங்கப்பட்டுள்ளதுடன், அடிப்படை வசதிகள், தற்காலிக பாதை மற்றும் வேலி போன்ற கட்டமைப்புகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஆலயப் பொருட்களை முறையாக அப்புறப்படுத்தி, தற்போதுள்ள இடத்தை முழுமையாக ஒப்படைப்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்திலும் நிர்வாகத் தரப்பு கையெழுத்திட்டுள்ளது.
இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களை உட்படுத்திய விவகாரங்களுக்கு சுமூகத் தீர்வுகாண, சிலாங்கூர் அரசு தொடர்ந்து கலந்துரையாடல், பேச்சுவார்த்தை போன்ற நல்லிணக்க அணுகுமுறையைக் கையாளும் என, ஆட்சிக் குழு உறுப்பினருமான பாப்பாராயுடு உறுதியளித்தார்.



