
ஈப்போ, ஆகஸ்ட்-20-பேராக் ஆற்றில் சூட்கேஸ் பயணப் பெட்டிக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்த, போலீஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குவாலா கங்சாரில் உள்ள ஜெட்டி லெம்பா அருகே ஆற்றில் மிதந்த சூட்கேஸிலிருந்து அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
போலீஸ் மற்றும் தேசியப் பதிவு இலாகாவின் கை விரல் ரேகை சோதனையில் அவரது கைரேகைப் பதிவுகள் எதுவும் பொருந்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல் பரிசோதனை அடிப்படையில், அப்பெண்ணுக்கு முப்பதுகளில் வயது இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
அவர் 154 சென்டி மீட்டர் உயரமும், 48 கிலோ எடையும், மாநிறமும், தோள்பட்டை வரை கருப்பு முடியும் கொண்டவர் ஆவார்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, அவர் கருப்பு-வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட முழுக்கை சட்டை, கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் தோடுகள் அணிந்திருந்தார்.
இந்த அடையாளங்களுடன் காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் அல்லது இது குறித்த தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு குவாலா கங்சார் மாவட்டப் போலீஸ் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



