
புது டெல்லி, ஏப்ரல்-19-மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், Hormuz நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
சனிக்கிழமையன்று இந்த முக்கிய கடல்வழிப் பாதையைக் கடக்க முயன்றபோது இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டன.
இதில் ஒரு கப்பல் Sanmar Herald என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் கப்பல்களும் அதில் இருந்த மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய அரசு உறுதிப்படுத்தியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள ஈரான் தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது “கடுமையான கவலையை” பதிவுச் செய்துள்ளது.
அதோடு, இந்தியாவுக்கு வரும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யுமாறு ஈரான் அதிகாரிகளிடம் இந்தியா வலியுறுத்தியது.
ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்த்து, Hormuz நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த வழியாக வரும் எந்தவொரு கப்பலும் ‘எதிரி’ எனக் கருதப்பட்டுத் தாக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகம் இந்தப் பாதை வழியாகவே நடைபெறுவதால், இந்தத் தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்றாலும், ஏப்ரல் 22-ஆம் தேதி போர்நிறுத்தக் காலக்கெடுவுக்கு முன்னதாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்தியஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



