
கோலாலம்பூர், மே-21- விடியற்காலை நேர நெரிசலின் போது, கோலாலம்பூர் நகரத்தின் மையத்தில் உள்ள பசார் செனி நிலையத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 3 நகரும் படிக்கட்டுகள் தற்காலிகமாகச் செயல் இழந்தன.
நகரும் படிக்கட்டுகளில் ஒன்று மட்டுமே இயங்கியதால், பயணிகள் நீண்ட வரிசைகள் மற்றும் மெதுவான நகர்வு குறித்து எச்சரிக்கப்பட்டதாக ரேபிட் கேஎல் (Rapid KL) தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
பாசார் செனி, இரண்டு முக்கிய இரயில் பாதைகளுக்கு இடையிலான ஒரு முக்கிய இணைப்பு மையமாக இருப்பதால், இது கோலாலம்பூரின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது.
பாசார் செனி என்பது Kelana Jaya LRT இரயில் பாதைக்கும் , காஜாங் (MRT) இடையிலான ஒரு பரிமாற்று நிலையமாகும்.
இது கோம்பாக், கேஎல்சிசி பங்சார், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, புக்கிட் பிந்தாங், செராஸ் மற்றும் காஜாங் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை இணைக்கிறது.
ஒரு மணி நேரம் கழித்து மூன்று நகரும் படிக்கட்டுகளும் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
காஜாங் வழித்தடத்தில் ஏற்பட்ட “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக, நிலையங்களில் பயணிகளுக்கு நிகழ்நேர ரயில் வருகை, புறப்பாடு மற்றும் சேவைத் தகவல்களைக் காட்டும் நடைமேடைத் தகவல் காட்சி அமைப்பு செயல்படவில்லை என்று ரேபிட் கேஎல் இதற்கு முன் தெரிவித்திருந்தது.



