
கோலாலம்பூர், ஜூலை-3-மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் இந்தியர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் நான்காவது முறையாக தாக்கல் செய்த புலனாய்வு அறிக்கையை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) இன்னும் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், கடந்த மே 25-ஆம் தேதி இந்த அறிக்கை கடைசியாக AGC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறினார்.
மாதங்கள் பல கடந்தும் இதுவரை உருப்படியான நடவடிக்கை எதுவும் இல்லையே என, ஜெலுத்தோங் உறுப்பினர் RSN ராயர் அக்கேள்வியைக் கேட்டிருந்தார்.
இந்நிலையில், சட்ட நடைமுறைகள் அதன்போக்கில் இயங்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கடந்தாண்டு நவம்பரில் நடந்த இந்த சம்பவத்தில் 24 முதல் 29 வயதுக்குட்பட்ட 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, இந்த வழக்கு கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கை முழுமைப்படுத்த இதுவரை 63 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



