
சிரம்பான், ஜூலை-7-சிரம்பானில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இந்திச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாட்டுக்கான அதிரடித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மித்ரா மூலமாக, 168 இந்து ஆலயங்களுக்குத் தலா 3.36 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை அவர் வழங்கினார்.
இதுமட்டுமின்றி, B40 குடும்பத்தைச் சேர்ந்த 4 முதல் 6 வயதுடைய 4,000 சிறுவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில், மாதம் தலா 230 ரிங்கிட் கல்வி மற்றும் ஊட்டச்சத்து மானியத் திட்டத்தையும் அவர் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ரமணன், ‘ஆலயங்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், சமூக மேம்பாட்டின் மையங்களாக மாற்ற வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
மடானி அரசாங்கம் இதுவரை 627 ஆலயங்களுக்கு 12.54 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியச் சமூகத்தின் வளர்ச்சிக்காக அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று உறுதியளித்தார்.
‘தர்மத்தைப் பின்பற்றினால் தெய்வம் துணை நிற்கும்’ எனக் குறிப்பிட்ட அமைச்சர், சமூகத்தைப் பிளவுபடுத்தும் வதந்திகளைப் புறந்தள்ளிவிட்டு, நாட்டை வளப்படுத்தும் மடானி அரசின் பயணத்தில் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.



