சிலாங்கூரில் போலி பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகள் தயாரித்த கும்பல் முறியடிப்பு; 13 பேர் கைது

ஷா ஆலாம், ஜூன்-29-போலிப் பயண ஆவணங்கள் மற்றும் போலிப் பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
ஷா ஆலாமில் நடத்தப்பட்ட Op Serkap அதிரடிச் சோதனையில், இந்த கும்பலின் மூளையாகச் செயல்பட்ட இந்திய நாட்டு பெண்மணி ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
மலேசியரின் மனைவியான இவர், நீண்ட கால சமூகப் பயண விசாவைப் பயன்படுத்தி கடந்த 3 ஆண்டுகளாக இந்த சட்டவிரோதச் செயலை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இக்கும்பல் வெளிநாட்டினரை KLIA வழியாக நாட்டிற்குள் வரவழைத்து, உடனடியாக கிள்ளானில் உள்ள ஒரு தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
அங்கு ஓரிரு வாரங்களில், அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக போலிப் பயணப் பதிவுகளையும், போலித் தற்காலிக வேலைவாய்ப்பு விசா (PLKS) முத்திரைகளையும் அவர்கள் தயாரித்துக் கொடுத்துள்ளனர்.
இந்தச் சோதனையில் இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 12 வெளிநாட்டினரும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்புடைய உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.



